அமானா நெகாரா கட்சித் தலைவர்களுக்கும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிமை உண்டு, இருப்பினும் அவர்கள் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
கருத்துச் சுதந்திரம் என்பது எந்தவொரு அமைப்பிலும் இயல்பான நடைமுறையாகும் என்றார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்பான வழக்கில், மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா அவர்களே முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளார் என்றும், அனைத்துக் கட்சிகளும் அது எந்த முடிவாயினும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“எவ்வாறாயினும், இந்த பிரச்சினையில் தங்கள் கருத்துக்களைக் கூறும் அனைத்து தரப்பினரும் ஒற்றுமை அரசாங்கத்தை நேசிப்பவர்கள் தான். ஒற்றுமை அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமையாக, ஒவ்வொரு தனிநபருக்கும் கருத்துக்களைக் கூற சுதந்திரம் உள்ளது. தனிநபர்களின் கருத்துக்கள் அமைப்பையோ அல்லது கட்சியையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று முகமட் சாபு மேலும் கூறினார்.















