கடந்த வாரம் நான்கு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஜோகூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட எஸ். நாகேந்திரன் மற்றும் ஏ. சங்கீதா ஆகிய இருவரும் 23 வயதுடையவர்கள், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிபதி டத்தோ அகமட் கமால் அரிபின் இஸ்மாயில் முன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுமொழி பெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், உடல் காயத்தை ஏற்படுத்தும் வகையில், தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தையை துஷ்பிரயோகம் செய்யும் பொதுவான நோக்கத்துடன் இருவரும் சிறுவனை துன்புறுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜொகூரிலுள்ள ஜாலான் அமான், தாமான் ஸ்கூடாய் பாருவிலுள்ள ஸ்கூடாய் வில்லா அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள அவர்களது வீட்டில் இந்தச் செயல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் படி, தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு RM50,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவ்வழக்கில் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் மூலம் ஒரு வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் வழங்குமாறு குழந்தையின் மாற்றான் தந்தையான நாகேந்திரன் மற்றும் குழந்தையின் தாயார் சங்கீதா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு ஆறு மாதக் குழந்தை ஒன்று இருப்பதாகவும் இன்னும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர்.
அத்தோடு குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முத்தியாரா றினி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் தலா ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM8,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
வழக்கின் உண்மைகள் மற்றும் தண்டனை மற்றும் வழக்கறிஞரை நியமனம் செய்வதற்கான வழக்கு ஜூன் 7 ஆம் தேதி மீண்டும் வழக்கு செவிமடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.















