சிலாங்கூரில் உள்ள தெலுக் பங்லிமா காராங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், கட்டாயக் குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்ட ஐந்து வெளிநாட்டு சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.
புக்கிட் அமான் சிஐடியின் கடத்தல் தடுப்பு பிரிவு (D3) மற்றும் பிற ஏஜென்சிகளுடன் இணைந்து, பல மாத கண்காணிப்புக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை (மே 26) மாலை சுமார் 5.45 மணியளவில் இந்த சோதனையை நடத்தியது.
இந்த சோதனையின் விளைவாக, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை மற்றும் தொழிலாளர் அனுமதி சீட்டுகளை தவறாக பயன்படுத்தியது உட்பட பல்வேறு குடியேற்றக் குற்றங்களுக்காக 80 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,
“மனித கடத்தல் குறிகாட்டிகள் பற்றிய தேசிய வழிகாட்டியின் (NGHTI) அடிப்படையில், மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாக இருந்தது” என்று கூறப்படுகிறது.
“Atipsom சட்டத்தின் கீழ் ஐந்து வெளிநாட்டு வாலிபர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட கம்போடியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், மியன்மாரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானிய பையன்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே பயன்படுத்தப்பட்ட மின்னணு பாகங்களை அகற்றும் பணியில் குறித்த பதின்மவயதினர் பணிபுரிந்ததாகவும், அவர்களுக்கு தினசரி 70 ரிங்கிட் முதல் 80 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் அரசு தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மற்ற வெளிநாட்டவர்கள் – 29 கம்போடியர்கள், 27 மியன்மார் நாட்டவர்கள், 13 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஐந்து சீன பிரஜைகள் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
“தொழிற்சாலையின் மேலாளர் என்று நம்பப்படும் ஒரு உள்ளூர் நபரையும், துணை மேலாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஆண் சீனப் பிரஜையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.