EGO-வின் தேன் கலந்த பேரீச்சம் பழத்தில் அளவுக்கு அதிகமாக சல்ஃபர் டைஆக்சைட் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவற்றை உடனடியாக மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய அந்த இரசாயனம் கலந்திருப்பது குறித்து உணவுப் பொட்டலத்தில் குறிப்பிடப்படவில்லை.
அடுத்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி காலாவதியாக வேண்டிய ஒரு தொகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டது என்று நேற்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
இது, சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது. இதனை இறக்குமதி செய்த கீ வீ ஹப் கீ உணவுத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அவற்றை மீட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடைகளில் உள்ள இந்த வகை பேரீச்சம் பழங்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன.
உணவில் அளவுக்கு அதிக மாக சல்ஃபர் டைஆக்சைட் சேர்க்கப்பட்டால் சில தனிப்பட்ட வர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அரிப்பு, படை, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இத்தகைய பேரீச்சம் பழங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளிக்கும்படி சிங்கப்பூர் உணவு நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனைச் சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாதவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடலாம் என்று உணவு அமைப்பு அறிவுறுத்தியது.