பினாங்கு கெடாவின் உரிமைக்கு உட்பட்டது என்று கூறியதற்காக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சட்டத்துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு தனது சர்ச்சைக்குரிய கருத்தை நியாயப்படுத்தும் வகையில், கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரிய சனுசி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற பொறுப்பற்ற மற்றும் கண்மூடித்தனமான அறிக்கைகள் மீண்டும் வெளியிடப்படாமல் இருக்க சட்ட நடவடிக்கை அவசியம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
“இது தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவரிடம் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” என்று நாடாளுமன்றத்தில் இன்று நடந்த பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அன்வார் கூறினார்.
“பினாங்கை தனி மாநிலமாக இல்லாது செய்ய கூட்டரசு அரசியலமைப்பை திருத்தியமைத்து, கெடாவுக்கு அதனை திரும்ப கொண்டுவர வேண்டும்” என்று கூறிய கெடா மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று, டிஏபியின் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், கேட்ட கேள்விக்கு அன்வார் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் அன்வார் தனது பதிலில், கெடாவிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமாக பினாங்கின் அந்தஸ்து சுல்தான் சர் பத்லிஷா அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் ஆட்சியின் போது, அதாவது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே தீர்க்கப்பட்டது என்று கூறினார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் இந்த விஷ்யம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.