ஜோகூர் பாருவின் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் வளாகத்தில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சிங்கப்பூர் ஆடவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதிய கழிவறை வசதிகளும் அறிவிப்புகளும் இருந்தும் அவர்கள் அவ்வாறு செய்தனர்.
இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (13 ஜூன்) நள்ளிரவு சுமார் 12 மணிக்கும் அதிகாலை சுமார் 4 மணிக்கும் இடையில் பிடிபட்டனர் என்று, ஜோகூர் பாரு செலாத்தான் (JBS) மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவருக்கு வயது 48. மற்றொருவருக்கு வயது 68. அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.
சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ரவூப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அவர்களில் ஒருவர் முறையான அனுமதியின்றி மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்தின் கீழும் விசாரிக்கப்படுகிறார்.
இதற்குமுன்னர் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இரு குடிநுழைவு முகப்புகளுக்கு இடையே பெண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் நிகழ்ந்தது. அதன்பிறகு ஜோகூர் குடிநுழைவுக் கட்டடத்தில் தொழுகை அறைக்கு அருகே 68 வயது ஆடவர் சிறுநீர் கழித்தது கண்டுபிடிக்கப்பட்டது.









