கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 2 (LPT2), புக்கிட் பேசி-அஜிலின் KM392.9 இல், நேற்றிரவு டிரெய்லர் லோரியின் மீது கார் மோதியதில் வயதான தம்பதியினர் உயிரிழந்தனர்.
இரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது, கோலா திரெங்கானுவில் உள்ள கம்போங் தோக் ரிமாவைச் சேர்ந்த முகமட்து கானி, 68 மற்றும் அவரது மனைவி மினா அப்துல்லா, 69, ஆகியோர் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று, உலு தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி ஹஸ்மீரா ஹாசன் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் குவாந்தானில் இருந்து கோலா திரெங்கானுவுக்கு பயணித்ததாக நம்பப்படுகிறது, அப்போது அவர்களின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம், சாலையின் இடதுபுறம் கோத்தா பாரு நோக்கிச் சென்று கொண்டிருந் செம்பனை கழிவுகளை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரியின் பின்பக்கத்தில் மோதியது.
“விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் “உயிரிழந்த தம்பதியின் மகனுக்கு கால்கள் உடைந்தன, அதே நேரத்தில் லோரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் காயமின்றி தப்பினர்” என்று அவர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்த பண்டார் அல்-முக்தாபி பில்லா ஷா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவர்களை அகற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உலு திரெங்கானு மருத்துவமனைக்கு அனுப்பபினர் என்று ஹஸ்மீரா கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த 17 ஆம் தேதி LPT2 விரைவுச்சாலையின் கெமாமன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், ஒரு தம்பதியினர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், அவர்களின் ஒரு பிள்ளை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது, மற்றோரு பிள்ளை இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.