வெற்றிக்கணிப்பு: பக்காத்தான் ஹராப்பான் 30, பாரிசான் நேஷனல் 2, பெரிக்காத்தான் நேஷனல் 24
வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
மாநிலத்திலுள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள் பெறுவர் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 30 வயதிற்கு கீழ்ப்பட்ட வாக்காளர்கள் இதற்கு முக்கியக் காரணமாக இருப்பர் என்றும் தெரிகிறது.
14 சட்டமன்றத் தொகுதிகளில் இவர்களின் வாக்குகள் துருப்புச்சீட்டுகளாக அமைந்திருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது. இது தவிர நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று 6 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது கொண்டிருக்கும் அதிருப்தியும் இந்த மாற்றத்திற்கு அதிமுக்கியமான தருணமாகத் திகழலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு அச்சாரமாக அண்மையில் தஞ்சோங் காராங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் 10,000 ஆதரவாளர்கள் திரண்டிருந்தது அமைந்திருக்கிறது.
அதேசமயத்தில் பிகேஆர் மகளிர் அணியினர் கடந்த ஜூன் 9ஆம் தேதி தஞ்சோங் காராங்கில் உள்ள பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கேந்திரத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் 2,000 பேர் மட்டுமே கலந்துகொண்டது ஆய்வுக்குரியதாக இருக்கிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 37 லட்ங்ம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிக்க உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 12 இடங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் 44 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
அதேசமயத்தில் பெரிக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்து 19 இடங்களிலும் கெராக்கான் 19 இடங்களிலும் பாஸ் 18 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் பக்காத்தான் ஹராப்பான் 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் பாரிசான் நேஷனல் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிக்காத்தான் நேஷனல் 24 இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
சிலாங்கூர் மாநிலத்தின் பராமரிப்பு மந்திரி பெசார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் செகிஞ்சான், கோலகுபு பாரு, புக்கிட் மெலாவத்தி, ரவாங், தாமான் டெம்பளர், சீங்கை துவா, புக்கிட் அந்தாரா பங்சோ, லெம்பா ஜெயா, பாண்டான் இண்டா, தெராத்தாய், பலாக்கோங், ஸ்ரீ கெம்பாங்கான், ஸ்ரீ செர்டாங், கின்ராரா, சீபாங் ஜெயா, ஸ்ரீ செத்தியா, புக்கிட் காசிங், கம்போங் துங்கு, பண்டார் உத்தாமா, புக்கிட் லஞ்சோன், கோத்தா டாமன்சாரா, பத்து தீகா, மேரு, பண்டார் பாரு கிள்ளான், பண்டமாரான், செந்தோசா, பந்திங், டெங்கில், சீங்கை பீலேக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சுங்கை ஆயர் தாவார், சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங், உலுபெர்ணம், பத்தாங் காலி, சுங்கை பூரோங், பெர்மாத்தாங், ஈஜோக், ஜெராம், குவாங், கோம்பாக் செத்தியா, உலுகிள்ளான், டுசீன் துவா, செமினி, சுங்கை ரமால், தாமான் மேடான், பாயா ஜெராஸ், செமந்தா, செலாட் கிள்ளான், கோலகிள்ளான், சீங்கை கண்டீஸ், சிஜங்காங், மோரிப், தஞ்சோங் செப்பாட் ஆகிய தொகுதிகளை அதன் வசமாக்கிக்கொள்ளும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கோத்தா அங்கீரிக், கோத்தா கெமுனிங் ஆகிய 2 தொகுதிகளையும் பாரிசான் நேஷனல் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.