மலேசிய மடானி: பி40 மகளிர், அன்னையர், தனித்து வாழும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு அரண்

பி40 தரப்பைச் சேர்ந்த நகர்ப்புற, புறநகர் மகளிர், அன்னையர், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் மலேசிய மடானி கோட்பாடு ஒரு பாதுகாப்பு அரணாக உருவாக்கப்பட்டிருக்கிறது.2023 மத்திய அரசாங்க பட்ஜெட்டில் மகளிர் நலன்களுக்காக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி இருக்கிறது.2023 பட்ஜெட்டில் வழங்கப்பட்டிருக்கும் மகளிர் நலத் திட்டங்களை சம்பந்தப்பட்ட இலக்கினர் சரியான  முறையில் பயன்படுத்தி பலன் அடைய  வேண்டும் என்பது ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்காகும்.

மகளிர் நலன்களைப் பாதுகாப்பது, பெண்களுக்கு ஆளுமைத் திறனை வழங்குவது, பாலின வேறுபாடுகளைக் கலைந்து ஒருங்கிணைப்பது போன்றவற்றில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அதீத கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது.மகளிருக்காக அமல்படுத்தப்பட்டிருக்கும் உதவித் திட்டங்களில் ஒரு பெண்கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கிறது. அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்? எப்பகுதியில் வசிக்கிறார்கள் அல்லது அவர்களின் சமூகப் பொருளாதார பின்னணியைப் பற்றிக் கவலைப்படாமல், பெண்கள் சமுதாயம் ஒட்டுமொத்தத்தில் பயன்பெற வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகவும் இலக்காகவும் இருக்கிறது.அரசாங்கம் அமல்படுத்தி இருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த மகளிருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும், வறிய ஏழைகள் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும், அவரவர்  சுமைகளில் இருந்து ஒரு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது.மகளிர், அன்னையர், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோர் நலன் கருதி அமல்படுத்தப்பட்டிருக்கும் நலத் திட்டங்களை இன்னமும் பெறாதவர்கள் உடனடியாக இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மிகவும் எளிதானது. நட்புறவான முறையில் அதற்கான பாரங்கள், தகவல்கள் பூர்த்தி செய்து தரப்படும். முடிவுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாகப் பதில் கிடைப்பதோடு உதவித் திட்டங்களையும் பெறுவதற்குரிய வாய்ப்பினை அவர்கள் விரைந்து பெறுவர்.தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளின் சேவை மையங்களுக்குச் சென்று இந்த உதவிகளுக்கு இக்குறிப்பிட்ட இலக்கினர் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் மக்கள் சேவை மையங்களில் இதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களையும் ஒற்றுமை அரசாங்கம் அறிமுகம் செய்து அமல்படுத்தி இருக்கிறது.

* பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதை ஊக்குவிப்பதற்கு முதலாளிமார்களுக்கு சிறப்பு அனுகூலங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.  சுமை தராத இந்த உதவித் திட்டங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுச் சம்பளத்தை அவர்களுக்குத் தருவதிலும் சலுகை நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது.

* பாலின கவன ஈர்ப்புக் குழு ஒவ்வோர் அமைச்சிலும் ஒவ்வோர் அரசாங்க நிறுவனங்களிலும், துறைகளிலும் அமைக்கப்படும்.

* பெண்கள் தலைமைத்துவம் – சிறப்புப் பயிற்சித் திட்டங்கள்  இடைவிடாது நடத்தப்படும்.

* உள்ளூர் சமூக ஆதரவு மையங்கள் திறக்கப்பட்டு பெண்களுக்குத் தேவையான உதவிகள், வசதிகள் வழங்கப்படும்.

* மகளிர் ஆளுமை: தீர்ப்பாயம், சட்ட ஆலோசனைத் திட்டம் அமைக்கப்பட்டு அதன்வழி பாலியல் துன்புறுத்தல் சட்டம் அமல்படுத்துவதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.

* பிரசவத்திற்குப் பிறகு குழந்தை வளர்ப்பு தொடர்பில் பயிற்சி, நிபுணத்துவச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்கள் குழந்தை வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் நிபுணத்துவ ஆலோனைகளையும் பெறுவர். இதுவும் ஒரு வருமானத்தை ஈட்டித் தரும் திட்டமாகும்.

* மகளிர் வர்த்தகத் துறைகளில் ஈடுபடுவதற்கு நிதி உதவி அளிப்பது. இத்திட்டத்தின் கீழ் சிறுதொழில், சிறு வணிகம், வீட்டில் இருந்தே வியாபாரம் செய்யும் பெண்களுக்கு குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த மகளிர், தனித்து வாழும் தாய்மார்களுக்கு முதலீட்டு உதவித் தொகை வழங்கப்படுவதோடு உபகரணப் பொருட்களும் வாங்கித் தரப்படும்.

* பேங்க் நெகாரா மலேசியா, பேங்க் சிம்பானான் நேஷனல், தெக்குன் நேஷனல் போன்ற அரசாங்க வங்கிகள் மற்றும் ஏஜென்சிகளின் வழி இந்த வர்த்தகக் கடன், நிதி அளிப்பு வழங்கப்படும். சுமையும் நெருக்கடியும் தராத நிபந்தனைகளோடு இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

* அரச மலேசிய போலீஸ் படையின்  பெண்கள், சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களைக் கடுமையாக விசாரிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

* இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம்: மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கேசோ,  குடும்ப மாதர்களை அதன்  இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிந்து வருகிறது. ஒரு சிறு தொகையை சந்தாவாகச் செலுத்துவதன் மூலம் நிறைவான பாதுகாப்பைப் பெண்கள்  பெறுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், இல்லங்களில் நிகழும் விபத்துகள், பேரிடர்கள், வெளியிடங்களில்  நிகழும் விபத்துகள் போன்றவற்றில் இருந்து      பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், இல்லத்தரசிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

* மார்பகப் புற்றுநோய்,   புற்றுநோய் பரிசோதனைக்கு அரசாங்கம் உதவி மானியம் வழங்குகிறது. இதன்வழி வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் இந்தப் பரிசோதனையில் பங்கேற்பதற்கு அரசாங்கம் வழி அமைத்திருக்கிறது. பெண்கள் நலத் திட்டத்தில் இந்த அடிப்படை சுகாதாரம், ஆரோக்கியத் திட்டங்களிலும் ஒற்றுமை அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி வருகிறது.

அன்னையர்களுக்கு

* கல்வி கற்றலில் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகளையும் இதர சிகிச்சைகளுக்கான செலவுகளையும் வருமான வரியில் இருந்து விலக்களிப்பதற்கு அன்னையர்களுக்கு சிறப்புச் சலுகைகளை ஒற்றுமை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது இப்போது நடைமுறையிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

* மாதம் 800 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளை அரசாங்க அனுமதி பெற்ற சிறார்கள் மையங்களுக்கு அனுப்புவதற்கும் அதற்குண்டான சிறார் பராமரிப்புக் கட்டணத்தில் சிறப்புச் சலுகையின் கீழ் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

* சிறார் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் தனியார் சிறார் பராமரிப்பு மையங்களுக்கான கட்டணத்தில் உதவும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. அன்னையருக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் உதவித் திட்டங்களில் இந்த மானிய உதவியும் அடங்குகிறது.

* பிள்ளைகளுக்கான அலாவன்ஸ் சலுகைகளில் வரி விலக்கு நீட்டிப்பும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்  நாடு முழுவதும் உள்ள பி40 தரப்பு,      வறிய ஏழ்மைக் கோட்டில் வாழும் தாய்மார்கள், பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு 2023 பட்ஜெட்டில் இவர்களின் நலன் பேணும் பல்வகையான நலத் திட்டங்களை மலேசிய மடானி ஒற்றுமை அரசாங்கம் அறிவித்து அமல்படுத்தி வருகிறது.

இந்த சமூகநல உதவிகளானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக மட்டுமல்ல. மலேசியாவிலும் வாழும் அனைத்து இனங்களையும் சேர்ந்த பெண்களுக்கான நலத் திட்ட உதவிகளாக இது விளங்குகிறது.

இந்த உதவிகளைப் பெறுவதற்கு அவர்களின் பின்னணி, இனம் போன்ற வேறுபாடுகளையும் அல்லது ஏற்றத் தாழ்வுகளையும் அரசாங்கம் பார்ப்பதில்லை.

உதவி பெறுவதற்கு தகுதி  பெற்றவர்கள் என்ற ஒரு தகுதியின் அடிப்படையில் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் இந்த உதவித் திட்டங்களை ஒற்றுமை அரசாங்கம் வழங்கி வருகிறது.

சிறார்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் நலன்களிலும் அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி வருகிறது. இந்த உதவித் திட்டத்தில் எந்தவொரு மகளிரும், தனித்து வாழும் தாயும், உதவி தேவைப்படும் சிறுமிகளும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.

மூதாட்டிகள், வீடற்றவர்கள், பேரிடரில் பாதிக்கப்படும் பெண்கள் ஆகியோருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக ஒற்றுமை அரசாங்கம் இருக்கிறது.

அது மட்டுமல்லாது பெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாடுகளையும் அடியோடு துடைத்தொழிப்பதிலும் ஒற்றுமை அரசாங்கம்  குறிப்பாக அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தலைமையிலான மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு உறுதியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here