புத்ராஜெயா, ஜூலை 5-
நான் எந்தத் தரப்புக்கும் தலையாட்டி பொம்மையாக இருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று திட்டவட்டமாகக் கூறினார். ஆகவே யாரும் பணத்தைக் கொடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக சொல்வதைத்தான் பிரதமர் கேட்கிறார் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்து அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.
அதிகமான இடங்களை வைத்திருப்பதால் ஜசெகவுக்கு நான் தலைவணங்கி விடலில்லை. நான் பிரதமர். நான் யாருக்கும் தலையாட்டி பொம்மையாக இருக்கவில்லை.
இறைவன் கருணையால் எனக்கு 76 வயதாகிறது. பணம் கொடுத்து யாரும் என்னை விலைக்கு வாங்க முடியாது. விலைகொடுத்து என்னை வாங்கியிருந்தால் எப்போதே தடம் மாறிப் போயிருப்பேன்.
சுபிட்சத்தைப் பாதுகாப்பதற்கு என் சகாக்கள் மிகமுக்கியமானவர்களாக உள்ளனர் என்றார் அவர். ஜசெகவில் உள்ள தோழர்களை நான் தற்காக்க விரும்பவில்லை. 7 மாதங்களாக அவர்கள் அமைச்சரவையில் இருக்கின்றார்கள்.
அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய தலைமைச் செயலாளரும் (டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி) இருக்கின்றார். மலாய் சமூகத்திற்கான செயல்திட்டங்கள் குறித்து ஜசெக அமைச்சர்கள் இதுவரை கேள்வியே எழுப்பியதில்லை.
ஏழை மக்களுக்கான அல்லது இஸ்லாமிய சமயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அவர்கள் கேள்வி கேட்டதில்லை. இந்த 7 மாதங்களில் அவர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பியதே இல்லை என்று பிரதமர் சொன்னார்.
ஆகவே ஜசெகவை நான் தண்டிக்கவோ, குறைகூறவோ விரும்பவில்லை என்று பிரதமர் சொன்னார். காம்ப்ளெக்ஸ் இஸ்லாம் புத்ரா ஜெயாவில் ஒரு நூல் வெளியீட்டில் அவர் உரையாற்றினார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெகவுக்கு வலுவான செல்வாக்கு இருக்கிறது என்று டாக்டர் மகாதீர் கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தில் ஜசெகவின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த நால்வர்தான் அமைச்சர்களாக இருக்கின்றனர். எனவே ஜசெக தன் ஆதரவை மீட்டுக்கொண்டால் அன்வார் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று லங்காவி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மகாதீர் கூறியிருக்கின்றார்.
4ஆவது பிரதமராகவும் அதன்பின்னர் 7ஆவது பிரதமராகவும் இருந்தபோது தோல்விகண்டிருக்கும் டாக்டர் மகாதீர் அதற்காக மற்றவர்கள் மீது குறைசொல்லக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவரும் கெஅடிலான் தேசியத் தலைவருமான அன்வார் சொன்னார்.
முன்பு நீங்கள் தோல்வி கண்டிருந்தால் அது உங்கள் தவறு. உங்களின் ஆதரவாளர்களின் தவறு அல்ல என்று துன் மகாதீருக்கு அன்வார் பதில் அளித்தார். மலாய் சமூகப் பொருளாதாரம் இப்போது ஏன் எழுச்சி பெறவில்லை. 7 மாதங்களுக்குள் நான் ஏன் அனைத்தையும் தீர்க்க வேண்டும்? இப்போது நாட்டுக் கடன் 1.5 டிரில்லியன் ரிங்கிட்டாக இருக்கிறது.
2ஆவது பிரதமர் துன் ரசாக் கடன் பெறத் தொடங்கினார். எதற்காக? ஃபெல்டாவைத் திறந்தார். புறநகரங்களில் சாலைகளை அமைத்தார். புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டினார். இந்த நல்ல முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அதன்பிறகு எதற்காகக் கடன் பெறப்பட்டது? கோடிக்கணக்கான ரிங்கிட்டைச் சுருட்டுவதற்கு மெகா திட்டங்களைக் கொண்டுவந்தார்கள் என்றும் அவர் சொன்னார். நான் உட்பட அமைச்சர்களிடையே பணம் சுரண்டப்படுவதை தலைவர் எனும் முறையில் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். வரலாறுகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்? பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதுபற்றி பேசத் தேவையில்லை என்று அவர் மேலும் சொன்னார்.