மலாக்கா, ஆகஸ்ட்டு 15:
மலேசியா-இந்தோனேசியா எல்லைக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் உட்பட 11 இந்தோனேசிய குடிமக்கள் அந்த வழியாகச் சென்ற படகு ஊழியர்களால் மீட்கப்பட்டனர்.
24 முதல் 51 வயதுக்குட்பட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களும், Indomal Kingdom என அடையாளம் காணப்பட்ட படகு சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களால், இன்று மதியம் 12 மணியளவில் மீட்கப்பட்டனர் என்று, மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
மீட்கப்பட்டவர்களில் 26 வயதான ஒரு பெண் நீரில் மூழ்கியதால் மூச்சு விடுவதில் சிரமப்பட்டதாகவும், பின்னர் அவர் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஆனால் அவர் தற்போது நிலையாக உள்ளார் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக குடிநுழைவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.








