சிரம்பான்:
கடந்த ஜூலை மாதம் குழந்தையை தத்தெடுக்க முயன்ற ஒருவரை ஏமாற்றியது தொடர்பில், தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு பெண்களுக்கு சிரம்பான் மாவட்ட நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) 12 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றவாளிகளான ஜி.காயத்ரீ, 32, மற்றும் அலியா பேகம் செல்வம், 30, ஆகியோர் குறித்த தண்டனையை இன்று முதல் அனுபவிக்க வேண்டும் என்று மாவட்ட நீ திமன்ற நீதிபதி நூருல் சகினா ரோஸ்லி உத்தரவிட்டார்.
குழந்தை தத்தெடுப்பிற்கு உதவுவதாக கூறி, 37 வயது நபர் ஒருவரிடம் RM7,900 ஏமாற்றியதாக இருவரும் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டனர். அத்தோடு கடந்த ஜூலை 15 ஆம் தேதி இங்குள்ள ஜாலான் அரா, செண்டாயானில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டது.