பினாங்கு:
பினாங்குக்கு அருகே மனித முயற்சியால் உருவாக்கப்படும் சிலிகான் தீவுப் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இதற்கான அனுமதி தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயாவ் தெரிவித்தார்.
2,300 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளரான Silicon Island Development என்ற நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் துறையிடமிருந்து சுற்றுச்சூழல் நிர்வாகத் திட்டத்துக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதியன்று அனுமதி பெற்றதாக பினாங்கு முதலமைச்சர் கூறினார்.
இதன் தொடர்பில் பினாங்கு தீவின் தெற்குப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிலமீட்பு திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கைக்கு 71 நிபந்தனைகளுடன் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இத்துடன், சுற்றுச்சூழல் நிர்வாகத் திட்டத்துக்கு மாநில சுற்றுச்சூழல் துறை இந்தத் திட்டத்தை மதிப்பீடு செய்து அனுமதி வழங்கியதற்கு பினாங்கு அரசு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
“இது சிலிகான் தீவு மேம்பாட்டுத் திட்டம் கூட்டு முயற்சியின் ஒத்துழைப்பினாலும் உள்ளூர் சமூகத்தின் சுற்றுச்சூழல், பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்பவும் நிகழ்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
“இத்துடன், இந்த சுற்றுச்சூழல் நிர்வாகத் திட்டத்துக்கு பங்களித்த அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த 930 ஹெக்டர் திட்டம் தொடர்பான தூர்வாரும் பணிக்காக அமைக்கப்படவுள்ள கடல் வரையறைப் பகுதி அடையாளத் திரை, கடல் மிதவைகள் அமைக்கும் பணி ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கின. இதைத் தொடர்ந்து நிலமீட்புப் பணிகள் தொடங்கின.
இந்நிலையில் சிலிக்கான் தீவிற்கு தாம் முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், அவர்களுக்கான பதிவு திறக்கப்படும் என்றும், ஆனால் இந்த செயற்கை தீவு கட்டப்பட்ட பின்னரே தொழில்நுட்ப பூங்காவில் உள்ள நிலங்களை விற்பனை செய்யத் தொடங்கும் என்றும் சோவ் கூறினார்.







