ஜோகூர் :
நாளை நடைபெறவுள்ள பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகிய இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக மொத்தம் 4,000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு, போக்குவரத்துக் கடமை ஆகியவை இதில் அடங்கும் என்று ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ கமருல் ஜமான் மாமட் கூறினார்.
“போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிச்செய்ய, சாலை சீரமைப்புப் பணிகளை நிறுத்துமாறு பொதுப்பணித் துறை மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“வாக்களிப்பு மையங்களுக்கு வாக்காளர்கள் வருவதைத் தாமதப்படுத்தும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நாளை எந்த சாலைகளும் மூடப்படாது” என்று அவர் மேலும் கூறினார்.