கோத்த பாரு, ஜாலான் சலோரில் நேற்று மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் 15 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் வாலிபர் தலையில் பலத்த காயம் அடைந்து உடனடியாக இறந்துவிட்டதாக மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவூட் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் பாசீர் மாஸில் இருந்து கோத்த பாருவுக்குப் பயணித்தபோது மாலை 3 மணியளவில் சம்பவம் நடந்ததாக அவர் கூறினார். பிற்பகல் 3.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் தரப்பு குவிக்கப்பட்டது.
ஜாலான் சலோரில் வந்தபோது வாலிபரின் மோட்டார் சைக்கிள் மற்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவரின் மோட்டர் சைக்கிள் எதிர் பாதையில் சறுக்கி கார் மீது மோதியது. இதன் தாக்கத்தால் அவர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 66 வயதான கார் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமட் ரோஸ்டி கூறினார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முன் வந்து வழக்கு விசாரணை அதிகாரியை 09-7752355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.









