மியான்மருக்கு வருகை தரும் சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள், வருகையின் போது விசா வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து, அவர்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு அம்சமாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ‘வருகை விசா’ வழங்கப்படுகிறது.
மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு ராணுவம், ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த எதிர்ப்பை சமாளிக்க ராணுவம் போராடி வருகிறது. இவ்வாறு அமைதியற்ற சூழல் நிலவுவதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் மியான்மருக்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. அதேசமயம் அண்டை நாடுகளான சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து மியான்மருடன் நட்புறவை பராமரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.