சாங்கி விமான நிலையத்திற்குக் கிழக்கே, சிங்கப்பூர் நீரிணைக்கு மேலேயுள்ள வான்வெளியில் மலேசியாவில் பதியப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தவறுதலாக நுழைந்தது.
“சிங்கப்பூருக்குத் தீங்கு இழைக்கும் நோக்கம் அந்த ஹெலிகாப்டருக்கு இல்லை,” எனச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
மேலும், இந்த ஊடுருவலைக் கையாளுவதற்குச் சிங்கப்பூர் குடியரசு விமானப் படையைச் சேர்ந்த இரண்டு எஃப்-16 ரகப் போர் விமானங்கள் வான்வெளியில் சீறிப் பறந்தன என்றும் அந்த ஹெலிகாப்டர் மலேசியாவில் பதியப்பட்ட எண்ணெய்த் துரப்பண மேடையைப் புகைப்படங்கள் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் டாக்டர் இங் விளக்கினார்.
ஜோகூர் பாருவில் இருக்கும் பாசீர் கூடாங்கிலிருந்து சரவாக்கில் உள்ள மிரி என்னும் பகுதிக்கு அந்த எண்ணெய்த் துரப்பண மேடை கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தால், ஏதேனும் ஒரு விமானத்தின் பாதுகாப்பு எந்த நேரத்திலாவது சமரசம் செய்துகொள்ளப்பட்டதா என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா கேள்வி எழுப்பினார்.