புத்ராஜெயா: 12 வயது வளர்ப்பு மகளை (2021இல்) பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வர்த்தகர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் மீட்டெடுத்துள்ளது. 40 வயது ஆடவருக்கு கூடுதலாக நான்கு பிரம்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீட்டெடுக்க அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் வசீர் ஆலம் மைடின் மீரா, அழகிரி கமல் ரம்லி மற்றும் எஸ்.எம்.கோமதி சுப்பையா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அந்த நபரின் சிறைத்தண்டனையை ஏழு ஆண்டுகளாகக் குறைத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைத்ததில் கீழ் நீதிமன்றம் தவறு செய்ததாக வசீர் கூறினார்.
ஏழு வருட சிறைத்தண்டனை குறைவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான உறவை உயர்நீதிமன்றம் பரிசீலித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தண்டனையின் போக்கை கருத்தில் கொண்டு, குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பொருத்தமானது என்றார்.
ஜூலை 15, 2021 அன்று, அதே ஆண்டு ஏப்ரல் 17 மற்றும் மே 9 ஆகிய தேதிகளில் சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆறாம் வகுப்பு மாணவி மீது உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை அந்த நபர் ஒப்புக்கொண்டார். செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 16(1) உடன் படிக்கப்பட்ட குற்றச்சாட்டு பிரிவு 14 (a)கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை வழங்க முடியும்.
கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று, உயர் நீதிமன்றம் அந்த நபரின் மேல்முறையீட்டை அனுமதித்தது மற்றும் அவரது சிறைத்தண்டனையை ஏழு ஆண்டுகளாகக் குறைத்தது. அதே நேரத்தில் பிரம்படி தண்டனையைத் தக்க வைத்துக் கொண்டது. இது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பு தூண்டியது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 201இன் பிரிவு 16(1)ஐ உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் பி சாருலதா கூறினார்.