இந்தியா -இஸ்ரேல் இடையிலான ஏர் இந்தியா விமானச் சேவைகள் ரத்து

புதுடெல்லி:

ந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இஸ்‌ரேலில் கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏராளமான விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா விமான நிறுவனம் புதுடெல்லிக்கும் இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்கும் இடையே விமானச் சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது இரு பாதைகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல்மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு போர்க்கால நிலையை அறிவித்திருக்கிறார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்‌ரேல் மீதான தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களது குடும்பங்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

இஸ்ரேலில் நிலவும் தற்போதைய சூழலில் அங்குள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும் அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனமாக இருக்கும் வேளையில், தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்கும்படியும் பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகில் இருக்கும்படியும் அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here