டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் படையை அழித்தொழிக்க இஸ்ரேல் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹாமஸ் படை கடந்த அக்டோபர் 7 நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இப்போது இறங்கியுள்ளது.
காசா பகுதியில் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பும் இப்படி மாறி மாறி தாக்கிக் கொள்வதால் அங்கே பரபர சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது.
சிறப்புப் படை: இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை ஷின் பெட் என்ற அமைப்பு கவனித்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸை வேட்டையாடவும் முழுமையாக அழிக்கவும் ஷின் பெட் அமைப்பு புதிதாகச் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படைக்கு ‘நிலி’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘நிலி’ என்றால் ஹீப்ரு மொழியில் ‘இஸ்ரேல் பொய் சொல்லாது’ என அர்த்தமாகும்.
கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடித்துக் கொல்வது இந்த பிரிவு நோக்கமாகும். அன்றைய தினம் இஸ்ரேலுக்கு ஊருடுவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவின் ராணுவப் பிரிவில் உள்ள சிறப்பு கமாண்டோ பிரிவான நுக்பா வீரர்களை வேட்டையாடுவதே இந்த நிலி பிரிவின் நோக்கமாகும்.
வேட்டையாடச் சிறப்பு கமேண்டோ: இந்த புதிய சிறப்புப் படை மற்ற பிரிவின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாது. இவர்கள் சுயமாகச் செயல்படுவார்கள் என்று தெரிகிறது.. இதன் மூலம் தாக்குதல்களை விரைவாக நடத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்போர்.. முக்கியமான பயங்கரவாதிகள் ஆகியோரை வேட்டையாடுவதே இந்த நிலி குழுவின் பிரதான நோக்கமாகும். உளவுத் துறை மற்றும் களத்தில் இறங்கி வேலை செய்யும் கமேண்டோ வீரர்கள் என இரு தரப்பு வீரர்களும் இந்த பிரிவில் இருக்கும்.
கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தொடர்ச்சியாகக் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் காசா மீது முழு வீச்சில் படையெடுக்க ரெடியாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஹமாஸ்: முன்னதாக கடந்த சனிக்கிழமை தான் (அக்டோபர் 14), இஸ்ரேல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ஹமாஸின் நுக்பா பிரிவில் உள்ள தளபதி அலி காதியை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. மறுநாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றொரு முக்கிய ஹமாஸ் பிரமுகரான பில்லால் அல் கேத்ரா என்பவரைச் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரும் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தது தாக்குதலை நடத்தி வருகிறது. மிக விரைவில் காசா மீது படையெடுக்க ஏதுவாக எல்லையில் அவர்கள் சிறப்பு ராணுவ தளங்களையும் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.