பெட்டாலிங் ஜெயா:
இந்திய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்களின் வளர்ச்சிக்கு உதவ Bank Rakyat குறைந்தபட்சம் RM50 மில்லியனை கடனுதவியாக வழங்கவுள்ளதாக டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) துறைக்கான வங்கியின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சரான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு 1,856 தொழில்முனைவோர் மற்றும் குறு வணிகங்களுக்கு சுமார் RM50 மில்லியனை சிறு கடனுதவி திட்டங்கள் மூலம் Bank Rakyat வழங்கியது, மேலும் இந்த ஆண்டும் அது தங்கள் சேவையை தொடரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
“அனைத்துத் தரப்புகளிலும் இருந்து அதிகமான தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான இந்த திட்டம் ஒற்றுமை அரசாங்கத்தின் வறுமையை ஒழிக்கும் நோக்கத்தை அடைய உதவுகிறது” என்று இன்று (ஜனவரி 4) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
மேலும் கடந்த ஆண்டு இந்த வங்கியின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு 1.14 பில்லியன் ரிங்கிட் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 406,183 பேர் இந்த கடனுதவியின் வாயிலாக பயன் பெற்றுள்ளனர் என்றும், இதில் தனிப்பட்ட கடன், வீட்டு கடன், வாகனங்கள் வாங்குவது, தங்க நகைகள் அடமானம் வைப்பது என பல ரீதியில் இந்த கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.















