மாலத்தீவுக்கு செல்லாதீர்கள், லட்சத்தீவுக்கு வாருங்கள் ; பிரபல பயண நிறுவனம் அதிரடி

மாலத்தீவுக்கான விமானப் பயணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளை நிறுத்தி வைப்பதாக இந்தியாவின் பிரபல ஆன்லைன் பயண நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் லட்சத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருமாறு அந்த நிறுவனம் சலுகை அறிவிப்புகளையும் முன்னெடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இந்தியப் பிரதமருக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில், இந்தியர்கள் மத்தியில் மாலத்தீவு மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற மாலத்தீவு தேர்தலை அடுத்து அங்கு ஆட்சியை பிடித்தவர்கள், இந்தியாவை சீண்டும் போக்கினை தொடர்ந்து வருகிறார்கள். சீனாவை ஆதரிக்கும் புதிய ஆட்சியாளர்கள், இதுநாள் வரை மாலத்தீவு வளர்ச்சி, பாதுகாப்பு, வருமானம் உள்ளிட்டவற்றில் முக்கியப் பங்கு வகித்த இந்தியாவுக்கு எதிராக கிளம்பினார்கள்.

அதன் உச்சமாக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் மூவர் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக பதிவிட்டனர். இதற்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு அதிகரித்ததில் அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டதோடு, பதிவிட்ட 3 அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனபோதும், இந்தியாவை சீண்டும் மாலத்தீவின் சுயரூபம் வெளிப்பட்டதும், இந்தியர்களும் பொதுவெளியில் இறங்கி ’மாலத்தீவினை புறக்கணிப்போம்’ என்று முழங்க ஆரம்பித்தனர்.

அதன் உச்சமாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவினை புகழ்ந்து பதிவிடத் தொடங்கினர். முன்னதாக பிரதமர் மோடி லட்சத்தீவு கடற்கரையில் ஓய்வெடுத்தது, பவளப்பாறைகளை தேடி கடலுக்குள் மூழ்கியது உள்ளிட்ட புகைப்படங்கள் வைரலாகி இலவச விளம்பரத்துக்கு வழி செய்துள்ளன. சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கையோடு 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்டங்களை மோடி அங்கே தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here