ஒட்டாவா: இந்தியா கனடா இடையே இப்போது மோதல்கள் தொடரும் நிலையில், கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். வீட்டு வாசலில் வைத்து அவரை சிலர் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
அவரது கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும். அதன் பிறகு இரு நாடுகளும் தூதர்களைத் திரும்பப் பெறுவது தொடங்கி மாறி மாறி பல நடவடிக்கைகளை எடுத்தன.
அந்தளவுக்கு இந்திய மாணவர்கள் கனடா பொருளாதாரத்திற்கு முக்கியம்.. இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கனடாவில் சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
பாதிப்பு: இது குறித்து கனடா அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில், “தற்போதைய சூழலில் கனடாவுக்கு வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்காது என்றே நினைக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியாக இருக்கும் மோதல் என்பது தொடர்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வரும் காலத்தில் எப்படிச் செல்லும் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அதிலும் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. தற்போதைய சூழலில் இந்தப் பிரச்சினைக்கு எனக்கு ஒளி எதுவும் தெரியவில்லை” என்றார்.
86% குறைவு: இந்தியா கனடா நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலால் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் பெர்மிட் 108,940இல் இருந்து 14,910ஆகக் குறைந்துள்ளது. அதாவது ஒரே சமயத்தில் சுமார் 86% குறைந்துள்ளது.
அதேநேரம் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதர் சி. குருஸ் சுப்ரமணியன் இது குறித்து வேறு விதமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், “சில கனடா கல்வி நிறுவனங்களில் மாணவர்களைக் கற்பிக்க போதுமான வசதிகள் இல்லை என்ற புகார்கள் வந்தன. இதன் காரணமாகக் கூட இந்திய மாணவர்கள் கனடாவைத் தவிர வேறு நாடுகளைப் பார்க்கலாம்” என்றார்.
குறைவு: கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. கடந்த 2022இல் மட்டும் சுமார் 2.25 லட்சம் இந்திய மாணவர்கள் கனடாவுக்குச் சென்றனர். இதன் மூலம் கனடாவுக்கு ஆண்டுதோறும் சுமார் $16.4 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.





















