காப்பாரில் நேற்று இலகுரக விமான விபத்தில் பலியான இருவரின் பிரேதப் பரிசோதனையில், விபத்தில் ஏற்பட்ட பல காயங்களால் அவர்கள் இறந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த விமானி டேனியல் யீ சியாங் கூன் (31) மற்றும் துணை விமானி ரோஷன் சிங் ரெய்னா (43) ஆகிய இருவரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று மதியம் 12:15 மணிக்கு முடிந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனையின் முடிவுகள், விமான விபத்தில் பல காயங்கள் மரணத்திற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது, மேலும் கைரேகை பரிசோதனையில் பலியானவர்களின் அடையாளம் டேனியல் யீ மற்றும் ரோஷன் சிங் என உறுதி செய்யப்பட்டது. உடல்களை ஒப்படைப்பதற்கான செயல்முறைக்கு பலியான இருவரின் குடும்பத்தினரும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு உடல்களை கொண்டு செல்வதில் காவல்துறை ஒத்துழைக்கும் என்று தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை (HTAR) தடயவியல் துறையில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
இதற்கிடையில், காப்பார் பகுதியில் உள்ள செம்பனை தோட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக விஜய ராவ் கூறினார். இந்த ஐந்து நபர்களும் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். மேலும் விசாரணைக்கு உதவ அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.