கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ராணுவ டிரக்: ஒருவர் பலி -4 பேர் காயம்

ஜித்ரா: ஜாலான் கம்போங் புக்கிட் கெச்சிக் சாங்லுன் என்ற இடத்தில் இன்று உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ராணுவ டிரக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்: மேலும் 4 பேர் காயமடைந்தனர். வியாழன் (பிப்ரவரி 22) மதியம் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அழைப்பு வந்ததாக குபாங் பாசு துணைக் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி சியென் சுங் சௌர் தெரிவித்தார்.

புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படைப்பிரிவின் முகாம் 5இல் பணியில் இருந்த 29 வயது ராணுவ வீரர் ஓட்டிச் சென்ற டிரக் கப்பாளா பத்தாஸ் வதனியா முகாமில் இருந்து (513 AW) பெர்லிஸில் உள்ள புக்கிட் கௌடர் முகாமான  30ஆவது படைத் தலைமையகத்தை நோக்கிச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.  டிரக் உணவு  சரக்குகளை ஏற்றிச் சென்றது. விபத்து நடந்த இடத்தில், டிரக் கட்டுப்பாட்டை இழக்கும் முன் எதிரே வந்த காரைத் தவிர்த்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

குறுகிய சாலை மற்றும் செப்பனிடப்படாத சாலை காரணமாக டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அது சாலையை விட்டு செம்பனை தோட்டத்திற்குள் சென்றதாக அவர் கூறினார். விபத்தில், டிரக்கின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பயணிகளில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அவர் கூறினார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜித்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், காயமடைந்த ஒருவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் நான்கு பேர் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் சியென் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41(1)இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here