இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்க இருக்கிறார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 5 மாகாண சட்டப்பேரவையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 137 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 113 இடங்களை கைப்பற்றியுள்ளனர். எனவே பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியை ஆட்சி அமைக்க பஞ்சாப் ஆளுநர் பாலிகுர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்க இருக்கிறார். இம்மாகாணத்தின் முதல்வராக பெண் ஒருவர் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். 50 வயதான மரியம் பிஎம்எல்-என் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். நாளை பஞ்சாப் மாகாணத்தின் புதிய சட்டசபை கூடுகிறது. இதில், மரியம் நவாஸ் முதலமைச்சராகவும், பிற தலைவர்கள் அமைச்சராகவும் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
மரியம் நவாஸின் தந்தையான நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை இருந்திருக்கிறார். மட்டுமல்லாது தனது அரசியல் வாரிசாகவும் மரியமை அறிவித்துள்ளார். முன்னதாக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிடிஐ, எதிர்க்கட்சியாக இருப்பதாக ஒதுங்கிக்கொண்டது. இரண்டாவது பெரிய கட்சியான பிஎம்எல்-என், சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு சிறப்பு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பஞ்சாபில் இந்த தொகுப்புகளை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று மரியம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தொகுப்பில் மாவு, நெய், பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை அடங்கியிருக்கும். பொறுப்பேற்பதற்கு முன்னரே சில அதிரடி நடவடிக்கையில் மரியம் இறங்கியுள்ளதால் பஞ்சாப் மாகாணத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.