தி. மோகன்
கிளானா ஜெயா:
தேசியப் பூப்பந்து விளையாட்டாளர் தீனா முரளிதரனுக்கு நாட்டில் வேலை செய்பவர்களுக்கு முதன்மை டிஜிட்டல் உயர்கல்விக்கூடமான மலேசியப் பொதுப் பல்கலைக்கழகம் (OUM) உபகாரச் சம்பளம் வழங்குகின்றது.
நேற்று முன்தினம் OUMமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த உபகாரச் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தில் தீனாவும் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமாட் இஸானி அவாங்கும் கையெழுத்திட்டனர்.
தீனா கடந்த 2020ஆம் ஆண்டு OUM பல்கலைக் கழகத்தில் தமது உயர் கல்விப் பயணத்தைத் தொடங்கினார். அவர் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் (TESL) இளங்கலைப் பட்டம் பயில்கின்றார்.
இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி தொடங்கி இவ்வாண்டு மே மாதம் வரையிலான தவணைக்கான கட்டணத்திற்கு இந்தப் பல்கலைக்கழகம் முழு நிதி ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் தீனாவின் அடைவுநிலைகளைப் பாராட்டிப் பேசிய பேராசிரியர் இஸானி, விளையாட்டாளர்கள் பயிற்சி, போட்டிகள் என எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் விளையாட்டுத்துறையில் எதிர்பாரா வண்ணம் கால அட்டவணைகள் மாறும்.
ஆனாலும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் அடிப்படையில் அவர்களின் வசதிக்கு ஏற்ப நாங்கள் பாடத் திட்டங்களை வழங்குகின்றோம். எங்களின் பாடத் திட்டங்கள் அனைத்தும் ஆன்லைனில் போதிக்கப்படுவதால் அவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் அதேசமயத்தில் கல்வியையும் கற்க முடியும். தீனா போன்ற விளையாட்டாளர்களின் வசதிக்கேற்ப உயர்கல்வியை வழங்குவதில் OUM பொறுப்புடைமை கொண்டுள்ளது. தீனா கல்வி, விளையாட்டு என இரு துறைகளிலும் வெற்றியடைய நாங்கள் உதவ முற்படுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.










