பேராக் மாநிலம் மஞ்சோங்கில் உள்ள சிற்றாலயத்தின் சிலைகளை உடைத்ததற்கு காரணமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 35 வயதான லோரி ஓட்டுநர் நேற்று இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தியதற்காகவும் நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக மஞ்சோங் காவல்துறைத் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
நேற்று மதியம் 1.30 மணியளவில், மஞ்சோங்கின் கம்போங் கோவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் ஒரு நபர் சிலைகளை சேதப்படுத்துவதைக் காட்டும் வீடியோ வைரலானது காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக நோர்டின் கூறினார். சந்தேக நபரை அவரது பணியிடத்தில் கைது செய்து, வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அவரது கைப்பேசியையும் பறிமுதல் செய்தோம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காணொளியை பார்த்ததும் ஒரு நிலையத் தலைவர் காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
சந்தேக நபர் இன்று தெலுக் இந்தான் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார். சமயத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டத்தின் 295ஆவது பிரிவின் கீழ், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் நடத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். இனம், சமயம் மற்றும் அரச குடும்பம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், இது போன்ற பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டாம் என்று நோர்டின் பொதுமக்களை எச்சரித்தார்.







