கோத்தா பாரு:
பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரையிலான இரண்டு மாத கால சிறப்பு நடவடிக்கையின் போது 579,418 வெள்ளி மதிப்பிலான, அண்டை நாடுகளில் இருந்து கடத்தப்பட்ட ஆறு கார்கள் மற்றும் ஐந்து மோட்டார் சைக்கிள்களை கிளந்தான் சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.
சிலாங்கூர், ஜோகூர் பாரு மற்றும் கெடா முழுவதும் உள்ள புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட தகவல்களின் படி, இவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில சுங்கத் துறை இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் தெரிவித்தார்.
நேற்று, சுங்க அமலாக்கக் கிளையில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்து கருத்துரைத்த அவர், அனைத்து கார்களும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு மலேசியாவில் சந்தை விலைக்குக் குறைவாக விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.
RXZ வகை மோட்டார் சைக்கிள்கள், படகுகள் மூலம் கோலோக் ஆற்றின் குறுக்கே சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு உள்ளூரில் உள்ளவர்களுக்கு RM7,000 முதல் RM8,000 வரை விற்கப்படுகின்றன என்றும் பறிமுதல் செய்யப் பட்ட எல்லா வாகனங்களும் தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.