புத்ராஜெயா: புகைபிடித்தல் குற்றங்களுக்காக மார்ச் மாதத்தில் 1.4 மில்லியன் ரிங்கிட்டிலான 5,549 சம்மன்களை சுகாதார அமைச்சகம் வழங்கியதாக சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறுகிறார். புகையிலை தயாரிப்பு விதிமுறைகள் 2004 இன் கீழ் சுகாதார அமைச்சகம் 18,178 வளாகங்களில் அமலாக்கா பிரிவினர் சோதனையை மேற்கொண்டனர். இதன் விளைவாக பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 8,926 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
டிங்கி காய்ச்சலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டம் 1975 அமலாக்கத்தின் மூலம், RM1.91 மில்லியன் மதிப்புள்ள 3,816 சம்மன்கள் வழங்கப்பட்டன. சராசரியாக ஒரு சம்மனுக்கு 500 ரிங்கிட் என்று அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 20) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நீதிமன்ற நடவடிக்கைக்காக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 95 வழக்குகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு மொத்தம் 180,600 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், உணவு சட்டம் 1983 அமலாக்கத்தின் மூலம், மொத்தம் 33,473 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக டாக்டர் முஹம்மது ராட்ஸி கூறினார். 124 வளாகங்கள் அல்லது ஆய்வு செய்யப்பட்ட மொத்த வளாகங்களில் 0.37%, தற்காலிக மூடல் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை வளாகத்தின் தூய்மை மற்றும் வழங்கப்படும் உணவை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.








