இந்த பாவம் சும்மா விடாது

பி.ஆர்.ராஜன்

 ஏழை மக்களின் பசியைப் போக்க வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள், குப்பை மேட்டில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படடிருக்கிறது. இந்த பொருட்கள் எப்படி எரிந்து சாம்பலானதோ அதேபோன்று  மக்களின் வயிறும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த படுபாதக செயலை புரிந்த கோல குராவ்  தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் துணை அமைச்சராகவும் இருந்த டத்தோஸ்ரீ டாக்டர்  இஸ்மாயில் முகமட் சைட்டிற்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

அதேசமயத்தில் வெட்ட வௌியில் பல நூறு பாக்கெட் அரிசி, சார்டின், கோதுமை மாவு உட்பட மேலும் பல வகையான உணவுப் பொருட்களை குப்பை மேட்டில் கொட்டி தீ மூட்டியதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு இந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெமர்லோ, ரும்புன் மக்மோர்– கம்போங் குனோங் சென்யும் ஒத்தையடிப் பாதையில் இருக்கும் குப்பை மேட்டில் அரிசி பாக்கெட்டுகள், சார்டின்கள், கோதுமை மாவு   பெட்டிகள் மேலும் பல வகை உணவுப் பொருட்கள் கொட்டப்பட்டிருந்த காணொளி ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

கோல குராவ்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்களுக்காக குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதற்காக இவை யாவும் வாங்கிக் கையிருப்பில்  வைக்கப்பட்டிருந்தன.

2020ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலின்போது இந்த பொருட்களை கொடுப்பதற்காக வைத்திருந்திருக்கிறார். ஆனால் தேர்தல் பிரச்சார காலத்தின்போது இதுபோன்ற பொருட்களை பொதுமக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்றாகும்.

இருப்பினும் தேர்தல் முடிந்த பிறகு அதனை தேவைப்படும் மக்களுக்கு இப்பொருட்களை அவர் வழங்கியிருக்கலாம். இப்போது இதற்கு அவர் பல காரணங்களையும் நியாயங்களையும் சொல்லலாம். ஆனால் அதனை நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் மக்கள் தயாராக இல்லை.

அரிசிக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற காலம் இது. உள்நாட்டு அரிசிக்காக கடை, கடையாக அவர்கள் ஏறி இறங்கி கொண்டிருக்கின்றனர். ஸ்டோரில் வைக்கப்பட்டிருந்த அரிசி பாக்கெட்டுகளை எலிகள் தின்று கொழுத்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களும் காலாவதியாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அரிசி உள்ளிட்ட இந்த உணவுப் பொருட்களை அவர் வெகு எளிதாக பட்டுவாடா செய்திருக்க முடியும். ஆனால் அந்த முன்னாள் உள்துறை அமைச்சருக்கு இவ்வாறு கொடுப்பதற்கு மனம் இருந்ததா என்பதுதான்  கேள்வி.

இந்த உணவுப் பொருட்களை சேமித்து வைத்த அவருக்கு அதனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் சீரியஸாக இருந்தாரா என்பதும் ஒரு கேள்விதான்.

தம்முடைய இச்செயலுக்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் இந்த மன்னிப்பு காலம் கடந்தது. இந்த மன்னிப்பு எந்த நியாயத்தையும் கற்பித்து விடாது. இது மா பாதகச் செயல்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில் மலாய்க்காரர்கள் அதிகமாக வாழ்கின்றனர். மலாய்க்காரர்களில் வறிய ஏழைகள், இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை தந்திருந்தால் அவர்கள் மனமார வாழ்த்தியிருப்பர்.

இந்த பொருட்களை அவர் தன்னுடைய சொந்த செலவில் வாங்கியிருந்தாலும்  மக்களுக்குப் போய்ச்சேராமல் குப்பை மேட்டிற்கு சென்றுவிட்டது. குப்பை மேட்டில் கொட்டப்பட்டு அதற்கு தீயும் வைத்து நாசப்படுத்தியிருப்பது மனித நேயத்திற்கு விழுந்த ஓர் அடியாகவே கருதப்பட வேண்டியதிருக்கிறது.

உணவுப் பொருட்களை இப்படி அநியாயமாக நாசப்படுத்தியிருப்பது ஒரு பாவச் செயல். இந்த பாவம் சும்மாவிடாது.  எப்போதோ செய்த காரியம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வௌிச்சத்திற்கு வந்திருப்பதும் இதனை தௌ்ளத்தௌிவாக நிரூபிக்கிறது. இனியும் வேண்டாம் இதுபோன்ற நாசச் செயல்கள். ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கவே கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here