இந்திய – மியான்மர் எல்லையில் 67 ஆண்டுகள்

பண்பாட்டை மறவாத மணிப்பூர் தமிழர்கள்

மணிப்பூர் தமிழர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் திருமண உறவும் நிகழ்ந்துள்ளது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரத்தில் ஓர் அற்புதமான தென்னிந்தியக் கோயில் காணப்படுவது வியப்பாகத்தான் இருக்கும். அந்த ஊரில் சுமார் 3,000 தமிழ்ச் சமூகத்தினர் வாழ்கிறார்கள் என்ற தகவல் மேலும் வியப்பளிக்கிறது.

மணிப்பூரின் எல்லை நகரமான மோரேவிலிருந்து பிபிசி இதை உங்களுக்குச் சொல்கிறது. தொலைதூரத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மணிப்பூரி நகரத்தை தங்கள் வசிப்பிடமாக மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இந்தக் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த அங்கத்தினர்களாகவே மாறிவிட்டனர்.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமான வளாகம் மோரேயில் தமிழர்கள் இருப்பதற்கான வெளிப்படையான எடுத்துக்காட்டாகும். இந்தக் கோயில் இந்திய-மியான்மர் எல்லையை முழுவதுமாக ஒட்டியுள்ளது.

அதன் முற்றமானது இரு நாடுகளுக்கும் இடையில் வரும் ‘நோ மேன்ஸ் லேண்ட்’ எனப்படும் எந்த நாட்டுக்கும் உரிமையில்லாத நிலப்பகுதியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் எப்படி மணிப்பூர் வந்தனர்?

பர்மா (இன்றைய மியான்மர்) ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தபோது, ஆங்கிலேயர்கள் பல தமிழர்களைக் கூலி வேலைகளுக்காக அழைத்துச் சென்றனர். பர்மா 1948 இல் சுதந்திர நாடானது. ஆனால் தமிழர்கள் உட்பட பல இந்திய மக்கள் அங்கு குடியேற விரும்பினர். 1962இல் பர்மா ஜனநாயகத்திலிருந்து ராணுவ ஆட்சிக்குத் மாறியபோது, அங்கு வாழும் இந்திய மக்களுக்குக் கடினமாகிவிட்டது.

ராணுவ ஆட்சி இந்தியர்களின் சொத்துகளையும் ஜனநாயக காலத்தில் இந்தியக் குடிமக்களுக்குக் கிடைத்த உரிமைகளையும் பறித்தது. அவர்களுக்கு எதிரான பாகுபாடு தொடங்கியது.

மணிப்பூரில் உள்ள கோயில்

அப்போதைய ரங்கூனில் (இப்போது யங்கூன்) பிறந்து, தமது எட்டாவது வயதில் மோரேவுக்கு வந்தவர் கே.பி.எஸ் மணியம் என்பவர்.

“1964ஆம் ஆண்டில், பிரதமர் ஜவஹர்லால் நேரு ரங்கூனுக்கு வந்து இந்தியச் சமூகத்தைச் சந்தித்தார். இந்திய மக்கள் நாடு திரும்ப விரும்புவதாக அவரிடம் கூறினர். நேரு கப்பலை அனுப்பினார், இலவசமாக இந்தியர்களை மீட்டு வரும் பணி தொடங்கியது. தமிழர்களும் இதே போலத்தான் இந்தியாவுக்கு வந்தனர். “

மணியம் இப்போது மோரேயில் உள்ள தமிழ்க் கோயிலின் மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராக உள்ளார். பர்மாவிலிருந்து தமிழர்கள் வந்த பிறகு, இந்திய அரசு ஓர் அகதி முகாமை அமைத்து மக்களின் மறுவாழ்வுக்கு உதவியது. ஆனால் தமிழகத்திற்குத் திரும்பி வருவதில் தமிழர்களுக்குப் பல சிக்கல்கள் இருந்தன என்று அவர் கூறுகிறார்.

பர்மாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவரது வாழ்க்கை முறையும் உணவும் முற்றிலும் மாறிவிட்டன. திரும்பி வந்த பிறகு, இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழியில்லாமல் போனது. பர்மாவிலிருந்து அவர்கள் கொண்டு வந்த பொருட்களைச் சிறிது சிறிதாக விற்றுத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

“இந்தப் புதிய சூழலில் இவர்களால் தங்கள் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக்கொள்ள இயலவில்லை. எனவே, பல தமிழர்கள் பர்மாவுக்கு திரும்பிச் செல்ல முடிவு செய்து, மணிப்பூரில் உள்ள மோரேவுக்கு வந்தார்கள். அங்கிருந்து எல்லையைத் தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்தார்கள்.

காரணம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘ஆசாத் ஹிந்த்’ படை, இந்தப் பகுதி வழியாகத்தான் பர்மாவுக்குள் சென்றது. அதில் பல தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு பர்மா செல்லும் அனைத்து வழிகளும் அத்துபடியாக இருந்தது. எனவே அவர்கள் பர்மா செல்லும் ஆசையில் தமிழ்நாட்டிலிருந்து மணிப்பூர் வந்தனர்,” என்று மணியம் கூறுகிறார்.

“அவர் மணிப்பூரில் குடியேற வரவில்லை, இங்கிருந்து பர்மா செல்வதற்காகவே வந்தனர்” என்கிறார் இவர்.

1964ஆம் ஆண்டில், 12 தமிழ்க் குடும்பங்கள் இங்கு இரண்டு குழுக்களாக வந்தன – ஒரு குழுவில் 7 குடும்பங்கள், மற்றொன்றில் 5 குடும்பங்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.பி.எஸ் மணியம்

முதல் 7 குடும்பங்களின் குழு பர்மாவுக்குள் நுழைய முயன்றது. ஆனால் அவர்களை கைது செய்து, கண்களைக் கட்டி ஒரு மாதம் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் அடைத்து வைத்தது பர்மிய ராணுவம்.

அதன் பின்னர் இவர்கள் மோரே காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உள்ளூர் மொழியறியாத காரணத்தாலும், வாழ்வாதாரம் இல்லாததாலும், மோரே காவல்துறையினர் இவர்களை மீண்டும் தமிழகத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி, இம்பாலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் குடும்பம் இம்பாலில் ஒரு தர்ம சத்திரத்தில் வசிக்கத் தொடங்கியபோது, அவர்கள் ஒரு தென்னிந்திய அதிகாரியைச் சந்தித்தனர். அவருக்கு உள்ளூர் மக்களின் மொழியறிவு சற்று இருந்தது.

மோரே இந்தியாவின் ஒரு பகுதி என்றும், இந்த மக்கள் அங்கு சென்று வாழலாம் என்றும் அந்த அதிகாரி சொன்னதாக மணியம் கூறுகிறார். மோரேவிலிருந்து வெளியேறும்படி காவல்துறை இவர்களை வற்புறுத்த முடியாது என்ற உறுதியையும் அவர் அளித்தார் என்றும் மணியம் தெரிவிக்கிறார்.

“இந்த 7 குடும்பங்கள் மீண்டும் மோரேவுக்கு வந்தன. அந்த அதிகாரி இங்குள்ள கிராம அலுவலருடன் பேசி, இந்தத் தமிழ்க் குடும்பங்களின் உணவு, உறைவிடத்துக்கு ஏற்பாடு செய்தார்.

மற்ற 5 குடும்பங்களும் பர்மாவுக்குள் நுழைந்தபோது, அவர்களும் பிடிபட்டு இதே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் அதிகாரிகளின் உதவியுடன், அவர்களும் இங்கு குடியேறினர்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த 12 தமிழ்க் குடும்பங்கள் மோரேயில் வசிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் உறவினர்களுக்குக் கடிதங்களின் மூலம் தாங்கள் இங்கு மிகவும் நிம்மதியாக வாழ்வதாகவும் இந்தப் பகுதி, பர்மா எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

“பர்மாவில் இருந்ததைப் போலவே தான் இங்கும் உணவுப் பழக்கங்கள் இருப்பதாகவும் அவர்களும் இங்கு வரலாம் என்றும் அவர்களின் கடிதங்கள் அழைத்தன. இப்படியாக ஒவ்வொரு தமிழ்க் குடும்பமாக இங்கு வரத் தொடங்கியது. நாங்கள் மோரேவின் மிகப்பெரிய குழுவாக மாறினோம். ஒரு காலத்தில், தமிழர்களின் எண்ணிக்கை இங்கு சுமார் 10,000 ஆக உயர்ந்தது,” என்று மணியம் நினைவு கூர்கிறார்.

ஆரம்பகால தமிழ் குடும்பங்கள் மோரேயில் ஓர் ஆலமரத்தை வழிபட்டு வந்தன. படிப்படியாக, மற்ற தமிழ்ச் சமூக மக்களும் அந்த மரத்தை வணங்க ஆரம்பித்து அது வளர வளர, அங்கே ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டது.

மோரேவில் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

1992 இல் தொடங்கிய புரட்சியின் போது, நாகா, குகி சமூகங்களிடையே இன மோதல்கள் தொடங்கியதும், இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று மணியம் கூறுகிறார்.

1995இல் தமிழ், குகி சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தமிழர்கள் மோரேவிலிருந்து வெளியேறத் தொடங்கினர் என்றும் அவர் கூறுகிறார். இன்று, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் மோரேவில் வாழ்கின்றனர்.

கமல காந்த் நாயுடு

ஆனால் இத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும், மோரே மக்கள் அவர்களை வரவேற்றுத் திறந்த மனதுடன் உதவியதாக மணியம் கூறுகிறார். “எங்கள் மொழி, பழக்க வழக்கங்கள், கலாசாரம் அனைத்தும் வேறுபட்டவை. இங்குள்ளவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால், நாங்கள் இங்கு குடியேறியிருக்க முடியாது,” என்கிறார் மணியம்.

மோரேயில் குடியேறிய பிறகு, இங்குள்ள தமிழர்களுக்கு பர்மாவுக்குச் செல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. “எங்கள் சமூகத்தில் பலர் தங்கள் உறவினர்களைப் பார்க்கவோ, கோயிலுக்குச் செல்லவோ அல்லது வியாபாரம் செய்யவோ பர்மாவுக்குச் செல்கிறார்கள்.

ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இப்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது. மியான்மரில் இன்றும் 10 லட்சம் தமிழர்களும் 800-க்கும் மேற்பட்ட தென்னிந்திய கோயில்களும் உள்ளன. இங்குள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் மியான்மரில் குடும்ப உறவுகள் உள்ளன. இரு தரப்பிலிருந்தும் தமிழ்ச் சமூக மக்கள் ஒருவருக்கொருவர் பார்க்க வருகிறார்கள். “

இங்குள்ள தமிழ் சமூகத்திற்கு உதவும் நோக்கத்தில், மோரே தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஒன்றும் நடத்தப்படுகிறது. தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கமல் காந்த் நாயுடு, “மோரே வழியாக பர்மாவுக்குச் செல்ல முடியாமல் இங்கேயே குடியேறிய தமிழர்களுக்கு பர்மிய மொழி தெரிந்திருந்தது.

எனவே அவர்களால் பர்மாவில் வியாபாரம் செய்ய முடிந்தது. இங்குள்ள உள்ளூர்வாசிகளுக்குக் கூட பர்மிய மொழியறிவு அந்த அளவுக்கு இல்லை. தமிழ்ச் சமூகம் பர்மாவுடன் வணிகத்தை நிறுவி வளர்த்தது. இன்னும் பர்மிய வணிகர்கள் தமிழ் வர்த்தகர்களையே அதிகம் அணுகுவதற்குக் காரணம் அவர்களுக்கு அங்குள்ள மொழி தெரியும் என்பதுதான்,” என்று கூறுகிறார்.

தமிழர்கள், உள்ளூர்வாசிகளுடன் இணக்கமாக வாழ்கிறார்களா?

பல தசாப்தங்களாக இங்கு வாழ்ந்த தமிழ்ச் சமூகமும் உள்ளூர் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மற்றும் உள்ளூர் மக்களிடையே திருமணங்களும் நடந்துள்ளன.

தமிழ்ச் சங்கம் மூலமாகவும் இந்தச் சமூகம் உள்ளூர் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. “தமிழ்க் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில், இப்போது உள்ளூர்க் குழந்தைகளும் இலவசமாகக் கல்வி கற்கின்றனர். முன்பு தமிழ் மட்டுமே கற்பிக்கப்பட்டது. இப்போது ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கிறார் நாயுடு.

தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் தமிழ்ச் சமூகத்திற்கு உதவுவதும் அவர்களுக்கு வசதிகளை வழங்குவதுமாகும். 1969 இல் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று, அதன் மொழி, பழக்கவழக்கங்கள் ,  கலாசாரத்தைப் பாதுகாப்பது பராமரிப்பதும் ஆகும் என்று நாயுடு கூறுகிறார்.

மியான்மரில் தற்போது நிலவும் சூழல் குறித்துத் தமிழர்கள் கருத்து என்ன?

மியான்மரில் நடந்து வரும் வன்முறைகளால் இந்தியாவுக்கு வரும் அகதிகள் குறித்து தமிழ் சமூகம் அனுதாபம் தெரிவிக்கிறது.

“அந்த மக்களும் மனிதர்கள். இப்போது பர்மாவில் ராணுவ ஆட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியா இந்த மக்களை வரவேற்க வேண்டும்.

ஆனால், இந்திய அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. எல்லைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள மக்களும் மனிதர்கள் என்றும் சிக்கலில் சிக்கியுள்ள மனிதர்கள் என்றும் இந்திய அரசு நினைக்க வேண்டும்.

நாம் அனைவரும் அந்த மக்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு உணவு ,  வீட்டு வசதி கிடைக்க வேண்டும். சுகாதார வசதிகளை வழங்க வேண்டும். ” என்று மணியம் கூறுகிறார்.

மோரேவில் வசிக்கும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இனி மியான்மர் செல்ல விரும்பவில்லை. தங்கள் நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், இங்கு இந்தியக் குடிமக்களாக இருப்பதற்கான அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெறுகிறார்கள், எனவே அவர்கள் ஏன் மியான்மருக்கு செல்ல விரும்ப வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here