பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஈரான் படைகள் நேற்று இரவு நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் கொல்ப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் ஈரான் படைகள் நேற்று இரவு திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் வாசுக் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூடுதல் துணை ஆணையர் உமர் ஜமாலி உறுதிப்படுத்தினார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை ஆணையர் வாஷூக் நயீம் உம்ரானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த, ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த ஆண்டு ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு இரு முஸ்லிம் அண்டை நாடுகளும் பரஸ்பரம் உறவுகளை சரி செய்ய முயன்றன. ரைசியின் பாகிஸ்தான் பயணம் அந்நாட்டுடனான உறவுகளை சீராக வைத்திருப்பதற்கு முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. ஈரான், பாகிஸ்தான் இடையே உறுதியான பிணைப்புக்கான வரலாறு இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது அந்நாடுகளிடையே போர் பதற்றத்தை தூண்டியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான், ஈரானில் உள்ள தனது தூதரை திரும்பப் பெற்றது. ஆனால், பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்துக்கு திரும்ப ஈரான் அனுமதிக்கவில்லை. மேலும், இரு நாடுகளிடையேயான ராஜீய ரீதியிலான செயல்பாடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.