நிபோங் திபால்:
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று ஊகிக்க முடியாத அளவிற்கு அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் அனல்பறக்கின்றது.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஜூலை 6ஆம் தேதி நடைபெறுகிறது.
சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரான நூர் ஸாம்ரி லத்திஃப் மே 24ஆம் தேதியன்று மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இவர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், பக்காத்தான் ஹரப்பானின் ஜொஹாரி அரிஃபின்னும் பெரிக்காத்தான் நேஷனலின் அபிடின் இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர்.
இருவருக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி சுங்கை பாக்காப்பில் 38,409 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் மலாய்க்காரர்கள் 59.36 விழுக்காட்டினர். சீனர்கள் 22.54 விழுக்காட்டினர். இந்தியர்கள் 17.39 விழுக்காட்டினர். ஏனையோர் 0.71 விழுக்காட்டினர்.
இதற்கிடையே, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றால் அத்தொகுதியில் தமிழ்ப் பள்ளி ஒன்றும் மூத்தோர் நடவடிக்கை நிலையம் என்றும் கட்டப்படும் என்று மலேசியத் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, ஜூலை 3ஆம் தேதியன்று சுங்கை பாக்காப் தொகுதிக்குச் சென்றபோது கூறினார்.