சிறையில் இருந்து விடுதலை; வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார் ஆங் சான் சூகி!

மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி ( 78). அதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. அத்துடன் இரண்டரை ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இதுவரை 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூகி எங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here