சித்தா’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘தசரா’ ஆகிய மூன்று படங்களும் 69வது ஃபிலிம் ஃபேர் விழாவில் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளன.
நடிகர் சித்தார்த் தயாரித்து, நடித்த படம் ‘சித்தா’. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார்.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைப் பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘சித்தா’ திரைப்படம் ஏழு ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்-சித்தார்த் (விமர்சகர்கள் விருது), சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய ஏழு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
இதேபோல் ‘பொன்னியின் செல்வன் 2’ல் நடித்ததற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
அத்துடன், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை வடிவமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதினை தட்டிச்சென்றுள்ளது.
‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’ படம் ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த முன்னணி நடிகர் விருதை ‘தசரா’ படத்திற்காக நானி பெற்றார். அப்போது பேசிய நானி ‘வெளிப்படையாக நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், இப்போதெல்லாம் விருது வழங்கும் விழாக்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது. நான் இங்கு வருவதற்கான ஒரே காரணம் கடின உழைப்புக்காக என் குழுவினர் விருதுகள் வெல்வதை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்,” என்றார்
சிறந்த முன்னணி நடிகை விருது கீர்த்தி சுரேஷ் (தசரா), சிறந்த அறிமுக இயக்குநர் – ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா) பெற்றனர். இப்படத்திற்காக கோலா அவினாஷ், சத்யன் சூரியன், பிரேம் ரக்ஷித் ஆகியோரும் விருது பெற்றனர்
தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் பி்ரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.