சட்டவிரோத மாட் ரெம்பிட் பந்தயத்தில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தொடர்ந்து கிள்ளான், பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் 16 வயது சிறுவனும் அடங்குவார். வைரலான 17 வினாடி வீடியோ, சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதைக் காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை 4.30 மணியளவில் பாண்டமாரான் விளையாட்டு திடலில் இருந்து போர்ட் கிள்ளான் வரை சட்டவிரோதமான மோட்டார் சைக்கிளோட்டிகள் அல்லது மாட் ரெம்பிட் குழுவினர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்ததாக தென் கிள்ளான் OCPD உதவி ஆணையர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார். ஓட்டுநர்களில் ஒருவர் மற்ற மோட்டார் சைக்கிள்களால் மோதப்படுவதற்கு முன்பு வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

16 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்று அவர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பல நடவடிக்கைகள் வழி கைதுகள் நடத்தப்பட்ட போதிலும், இந்த இடம் பெரும்பாலும் சட்டவிரோத பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக ஏசிபி சா கூறினார்.

சட்டவிரோத ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என்றார். இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1) இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் கைருல் நிஜாமை 010-2452144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here