அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சம் பரவியதன் காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகள் நேற்று (ஆகஸ்ட் 5) பெரும் சரிவைச் சந்தித்தன.
சிங்கப்பூரில் எஸ்டி குறியீடு அதிகபட்சமாக 4.9 விழுக்காடு வரை வீழ்ச்சி கண்டது. இதற்கு முன்னர், கொவிட்-19 பெருந்தொற்று பரவிய போது 2020 மார்ச் 23ஆம் தேதி சிங்கப்பூர் பங்குச் சந்தை அதிகமாக 7.4 விழுக்காடு சரிந்தது.
இன்னும் பின்னோக்கிப் பார்க்கையில், 2008 அக்டோபர் 24ஆம் தேதி, உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக 8.3 விழுக்காடு சரிவைச் சந்தித்தது சிங்கப்பூர் பங்குச் சந்தை.
திங்கட்கிழமை ஏற்பட்ட சரிவின் காரணமாக டிபிஎஸ் பங்குகள் 5.8 விழுக்காடு சரிந்து $33.27 என்ற விலையைத் தொட்டது. யுஓபி 5.5%, ஓசிபிசி 5.3% என்று வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.
ஜப்பானின் நிக்கேய் குறியீடு 12.4 விழுக்காட்டுச் சரிவைச் சந்தித்தது. மூன்று வாரங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான யென் மதிப்பு 10 விழுக்காடு உயர்ந்தது. அது அந்நாட்டின் பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
யென் நாணயத்தின் எழுச்சி, இறுக்கமான நாணயக் கொள்கை, அமெரிக்கப் பொருளியலைப் பற்றிய பெருங்கவலை ஆகியன ஜப்பான் பங்குச் சந்தையை கீழிறக்கின. அதன் 4,451.28 புள்ளி இழப்பு என்பது ஜப்பானின் வரலாற்றில் ஆக அதிகமான வீழ்ச்சி.
அண்மையில் 20 விழுக்காட்டுக்கு மேல் ஏற்றம் கண்ட பின்னர் நிக்கேய் குறியீடு சரிவுப் பாதையில் நுழைந்தது. மூன்றே மூன்று வர்த்தக நாள்களில் அது 18.25 விழுக்காடு இறங்கியது.
இந்தியப் பங்குச் சந்தையும் பெரும் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏறத்தாழ 2,400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 600 புள்ளிகளுக்கு மேல் இறக்கம் கண்டது.
அந்த இரண்டு பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்தவர்கள் ஒரே நாளில் ரூ.10.24 லட்சம் கோடியை இழந்ததாக வர்த்தக ஊடகங்கள் கூறின.
தென்கொரியப் பங்குச் சந்தையும் திங்கட்கிழமை வீழ்ந்தது. ஆஸ்திரேலியப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியிலிருந்து தப்பவில்லை.
அமெரிக்கப் பொருளியல் நிலவரமே ஆசியப் பங்குச் சந்தைகளின் திடீர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றபோதிலும் இந்தியப் பங்குச் சந்தைக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை இருக்கிறது.
இந்தியப் பங்குகளின் மதிப்பு அவற்றின் இயல்பான விலையைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதாலும் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் திருப்தி அளிக்காததாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுகிறார்கள்.









