டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது முதல் முறை 6.9 ஆகவும், இரண்டாவது முறை 7.1 ஆகவும் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டுக்கு சுமா 1,500 நாட்கள் நடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருந்தாலும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 1,300 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலயில் தான் இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியாஷூ பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.
அங்குள்ள நேரப்படி மாலை 4 மணியளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடடித்துக்கொண்டே தெருவுக்கு ஓடி வந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை நிலநடுக்கத்தால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டது என்று தகவல்கள் இல்லை.
நிலநடுக்கம் பற்றி புவியியல் மையம் கூறுகையில், அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஜப்பானிய தீவுகளான கியுஷு மற்றும் ஷிகோ பகுதி மக்களுக்கு இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கடற்கரை அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் தான் ஜப்பான் வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுமார் 18,000 மக்கள் உயிரிழந்தனர். ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையமும் சேதமடைந்தது. 112 பில்லியன் டாலர் அளவுக்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.