வயநாடு: கேரளாவின் வயநாட்டிற்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 152 பேரை இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினர்கள், குடும்பத்தினரை இழந்து வயநாடு மக்கள் தவித்து வந்த நிலையில், இன்று (ஆக.,9) அடுத்த அதிர்ச்சியாக வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர். நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியதை அடுத்து, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நில அதிர்வு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகாத நிலையில், நென்மேனி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.