பாரீஸ் ஒலிம்பிக்கின் போது தேசிய நீச்சல் வீராங்கனையின் உடை பற்றிய விவாதம் மீண்டும் எழுந்ததையடுத்து, மலேசிய விளையாட்டு வீரர்களின் விளையாட்டு உடைக்காக அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் மக்களை வலியுறுத்தியுள்ளார். நம் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு உடைகள் விஷயத்தில் அவர்களை விட்டுவிடுங்கள். உங்கள் விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதை நிறுத்துங்கள்.
அவர்களுக்கு ஒரே ஒரு முன்னுரிமை மட்டுமே உள்ளது – அவர்களின் விளையாட்டுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் ஒரு சுருக்கமான முகநூல் பதிவில் கூறினார். பெண் விளையாட்டு வீராங்கனைகளின் உடை விவகாரம் அடிக்கடி ஆன்லைனில் சூடான விவாதங்களை ஏற்படுத்தியது. சில தரப்பினர் முஸ்லிம் வீராங்கனை ஜிம்னாஸ்ட்கள் ஷரியா விதிகளுக்கு உட்பட்ட ஆடைகளை அணியவில்லை என்று விமர்சிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில் தெரெங்கானு மாநில விளையாட்டு வீரர்கள் உள்ளூர், வெளியூர் நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் ஷரியா விதிகளுக்கு உட்பட்ட ஆடைகளை அணிய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்படுத்தினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷரியாவுக்கு இணங்காத ஆடைகள் காரணமாக பெண்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்பதைத் தடைசெய்தது. மாநிலத்தைச் சேர்ந்த பல முஸ்லீம் பெண் ஜிம்னாஸ்ட்கள் விளையாட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது, சில நெட்டிசன்கள் தேசிய வீராங்கனையான நூர் தபிதா சப்ரியின் விளையாட்டு உடையை கேள்வி எழுப்பினர். மேலும் விளையாட்டு பிராண்டுகள் ஷரியா-இணக்கமான நீச்சலுடைகளை வெளியிட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். மற்றவர்கள், தபிதாவின் விளையாட்டு உடையை வைத்து மதிப்பிடக் கூடாது என்றும், ஒலிம்பிக்கில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதற்கிடையில் தபிதாவின் கணவர், நகைச்சுவை நடிகர் ஐசத் அஹ்மத் நஸ்ரி, தனது மனைவியின் போலியான ஆபாசப் படங்களை எடிட்டிங் செய்து பதிவேற்றியதற்காக சமூக ஊடகப் பயனாளர் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லை மீறியதாக அவர் விவரித்த நபருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக ஐசட் கூறியதாக உத்துசான் மலேசியா மேற்கோளிட்டுள்ளது. 25 வயதான தபிதா, சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் 3 மீ ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டியில் ஐந்து டைவ்களுக்குப் பிறகு 244.80 புள்ளிகளுடன் முடித்தார். 2020 இல் டோக்கியோவிலும், 2016 இல் ரியோ டி ஜெனிரோவிலும் போட்டியிட்ட பிறகு ஒலிம்பிக்கில் அவர் மூன்றாவது முறையாக அவர் போட்டியில் கலந்து கொண்டார்.








