முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்டவரால் தான் பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்நோக்கியதாக பெண் ஒருவர் அளித்த புகாரினை பெட்டாலிங் ஜெயா போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். 20 வயதுடைய பெண், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோத்தா டமன்சாராவில் உள்ள ஒரு பிரபலமான மாலில் துன்புறுத்தப்பட்டதாக ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.
தனது பாதுகாப்புக்கு பயந்து, அவர் தன்னை துன்புறுத்துவதை நிறுத்திவிடுவார் என்று நம்பி போலீசில் புகார் செய்ய முடிவு செய்ததாக அவர் கூறினார். பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷாருல்நிசாம் ஜாஃபர் கூறுகையில், சந்தேக நபர் ஒரு சட்டப்பூர்வ அமைப்பின் நிர்வாகத்தில் இல்லாத இயக்குநராக இருப்பதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தனக்கு அறிமுகமான ஒருவரால் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் குற்றம் சாட்டிய வீடியோ கிளிப் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒருவரைத் துன்புறுத்துதல் மற்றும் அவமானப்படுத்துதல் ஆகிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஷாருல்நிஜாம் கேட்டுக் கொண்டார்.








