முட்டைக்கோசில் “பைலோட்ரேட்டா”பூச்சி: சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்ட லோரி

ஜோகூர்:

சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று அங்கிருந்த அதிகாரிகளால் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த லோரியில் 2,160 கிலோ முட்டைக்கோஸ்கள் இருந்ததாகவும் அவற்றைச் சோதனையிட்டபோது முட்டைக்கோஸ்களில் உயிருடன் பூச்சிகள் காணப்பட்டதாகவும் மலேசிய நோய்த்தடுப்பு மற்றும் சோதனைச் சேவைப் பிரிவின் ஜோகூர் இயக்குநர் எய்டி புத்ரா முகமட் யூசேஃப் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து இரண்டாவது கடற்பாலம் வழியாக ஜோகூரின் சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடிக்கு அந்த லோரி வந்தது என்றும்,
அதில் 216 பெட்டிகளில் இருந்த முட்டைக்கோஸ்களில் சோதனை செய்யப்பட்டதில் ‘பைலோட்ரேட்டா’ என்னும் பூச்சிகள் உயிருடன் காணப்பட்டதாகவும் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

திருப்பி அனுப்பப்பட்ட முட்டைக்கோஸ்களின் மதிப்பு RM6,800 என்றும் அவர் கூறினார்.

மலேசிய நோய்த்தடுப்பு சோதனைச் சட்டம் 2011ன் கீழ், பூச்சிகள், நோய்கள் மற்றும் இதரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வது குற்றம் என்றார் அவர்.

சட்டத்தை மீறுவோருக்கு RM100,000 வரையிலான அபராதம், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எய்டி தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க மலேசியாவின் நுழைவாயிலில் கண்காணிப்பு தொடரும் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here