விதிப்படி நடக்கட்டும், எதுவாயினும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் – கணவர், மகன்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா, மலேயன் மேன்சன் நடைபாதையில் ஏற்பட்ட திடீர் மண் அமிழ்வால் பூமிக்குள் புதைந்த விஜயலட்சுமியைத் தேடும் பணிகள் 9 ஆம் நாளாக இன்று தொடர்கிறது.

கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி நடந்த அந்தத் துயரச் சம்பவத்தில் ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி செங்குத்தாக மண்ணுள் புதைந்தார்.

தன் கணவர் மாத்தையா,மகன் சூர்யா உள்ளிட்ட உறவுகளுடன் மலேசியாவுக்கு சுற்றுப் பயணியாக வந்த அம்மாது சம்பவ தினத்திற்கு மறுநாள் சொந்த ஊருக்குத் திரும்பவிருந்தார்.

இந்நிலையில் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஆலயம் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டு பசியாறலுக்காக சம்பந்தப்பட்ட நடைபாதையில் நடந்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மண் அமிழ்வால்

அவர் திடீரென்று அப்பாதாளக் குழியில் புதைந்துப் போனார்.

மனைவியின் பின்னாலேயே சற்று தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த அவரது கணவரின் கண் முன்னாலேயே இந்தத் துயரம் நிகழ்ந்தது.

மனைவியைத் தேடி அந்தக் கணவர் இங்கும் அங்கும் அந்தக் குழிக்குள் எட்டிப் பார்த்து அலறும் சத்தம் இதயத்தைப் பிழிந்தெடுத்தது.

தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மகன் சூர்யா தகவல் கிடைக்கப்பெற்று அவசரகதியில் அன்றிரவு 9.30 மணியளவில் கோலாலம்பூர் வந்தடைந்தார்.

அம்மாவைத் தேடி அலைந்து அம்மா அம்மா என்று அலறிய அவரின் பரிதாப குரல் இன்னமும் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது தாயின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவர் கணவரும், அம்மாவை எங்கள் சொந்த ஊரான குப்பத்திற்கேகொண்டு போய்விடுகிறோம் அவரைக் கண்டுபிடித்து தாருங்கள் என்று மகனும் அரற்றிக் கொண்டே உள்ளனர்.

ஆனால் இன்றோடு ஒன்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேடுதல்களுக்கும் எந்த பலனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட அவர்கள் இப்போது நிலைமை எவ்வாறாயினும் அதனை அப்படியே ஜீரணித்துக் கொள்ள தயாராகிவிட்டனர்.

எதுவாக இருந்தாலும் விதிப்படிதான் நடக்கிறது என்ற மனப்பான்மைக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here