மலேசிய இந்து சங்கம் 60ஆம் ஆணடில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. நம்முடைய பாட்டனார் – பாட்டி சமயத்தை பரப்பி வந்தனர். நம்முடைய பெற்றோர் அதனை கட்டி பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்பொழுது நம்மிடம் சமயப்பற்று குறைந்து வருகிறது என்று விலாயா மாநிலத்தின் 46ஆவது ஆண்டு திருமுறை ஓதும் விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் கணேஷ் பாபு தமதுரையில் தெரிவித்தார்.
சமயப்பற்று நம்மிடையே குறைந்து வருவது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நாம் அனைவரும் நம்மால் முடிந்த வரை சமயத்தை வளர்க்க பாடுபட வேண்டும். அதற்கு முதற்படி நம் பிள்ளைகளை சமயக்கல்வி வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது மட்டுமன்றி உங்கள் வட்டாரங்களில் நடக்கும் சமய நிகழ்ச்சிகளை பிள்ளைகளை அழைத்து சென்று அவர்களின் சமயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

மலேசிய இந்து சங்கம் தவறாமல் திருமுறை உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அது போன்ற சமய நிகழ்ச்சிகளில் உங்கள் பிள்ளைகளை பங்கேற்ற செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும். பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளின் சமயக் கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக விலாயா மாநில இந்து சங்கத்தலைவர் பாலாமணி சுப்ரமணியம் தமதுரையில் நாட்டில் பெரிய பெரிய ஆலயங்கள் உள்ளன. ஆனால் தற்பொழுதைய காலகட்டத்தில் நாம் ஆலயம் செல்வது மிகவும் குறைந்து விட்டது. வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் ஆலயம் சென்று வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். நம் சமயத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் தான் இளம் தலைமுறையினரின் மதமாற்றத்தை தடுக்க முடியும்.

அதனால் அனைவரும் இணைந்து சமய வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றார். மேலும் விலாயா மாநிலத்தில் இயங்கி வரும் 6 வட்டாரங்களில் கம்போங் பாண்டான் வட்டாரம் சிறந்த வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டது. அவ்வட்டாரத் தலைவர் அரிகிருஷ்ணன் வட்டாரத்தின் சார்பில் அப்பரிசினை பெற்றுக் கொண்டார்.
விலாயா மாநிலத்தின் 46ஆவது திருமுறை ஓதும் விழாவிற்கு தன்னார்வ முறையில் பங்கேற்று உதவி புரிந்த யுபிஎம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டதோடு, திருமுறை விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்த அனைவருக்கும் மாநிலத்தலைவர் பாலாமணி நன்றி தெரிவித்துக் கொண்டார்.









