ஜோகூர்:
ஜோகூர் மாநிலத்தில் பல மாவட்டங்களில் ஆயுதமேந்தி வீடுகளில் கொள்ளையிட்டு வந்த பாலா கொள்ளைக் கும்பல் காவல்துறையினரின் அதிரடியில் முறியடிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஜோகூர் மாநில காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஆண்கள், மேலும் இருவர் பெண்களாவர்.
கூலாய். பொந்தியான், மூவார் மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் யாவரும் 20 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
வேலி இல்லாத, பாதுகாவலர்கள் அற்ற வீடுகளில் கன்னமிட்டு இரவு வேளைகளிலும், அதிகாலை நேரங்களிலும் வீட்டை உடைத்து அந்தக் கும்பல் உள்ளே புகுந்து அங்கிருப்போரை ஆயுத முனையில் மிரட்டி கடந்த ஆறு மாத காலமாக கொள்ளையிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், 95,000 ரிங்கிட் மதிப்பிலான கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள், கைப் பைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் ஆகியவற்றையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
இவர்களில் 8 பேர் ஏற்கெனவே பல குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர். எட்டு பேர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
விசாரணைக்காக அவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கமிஷனர் கூறினார்.