கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் உயிருடன் புதையுண்ட 48 வயது ஜி. விஜயலட்சுமி மீட்கப்படாத நிலையில் அவரின்
குடும்பத்தாரிடம் கருணைத் தொகை 30 ஆயிரம் ரிங்கிட் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா இந்த தகவலை வெளியிட்டார்.
விஜயலட்சுமியின் குடும்பத்தார் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியா புறப்பட்டுச் செல்லும் முன்னர் அந்த கருணைத் தொகையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தது என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மனமுவந்து வழங்கிய நிதியுதவிகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு விஜயலட்சுமி குடும்பத்தாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆந்திரா, குப்பம் பகுதியை விஜயலட்சுமிக்கு நேர்ந்த பேரிடருக்கு கொடுக்கப்படக் கூடிய இழப்பீட்டுத் தொகை தொடர்பில் புதன்கிழமை கூடும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் அறிவித்தார்.
ஆகஸ்டு 23ஆம் தேதி நடந்த அந்த துயர சம்பவத்தில் விஜயலட்சுமி மஸ்ஜிட் இந்தியா சாலையில் ஏற்பட்ட திடீர் மண் அமிழ்வில் உயிருடன் புதைந்தார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடல், மீட்பு நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே மீட்பு நடவடிக்கைகள் 9 நாட்களுக்கு பின்னர் ஆகஸ்டு 31 ஆம் தேதி நிறுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து விஜயலட்சுமியின் கணவர் மாத்தையா மகன் சூர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்பட்டு சென்றனர்.