இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட நாட்டின் பல பகுதிகளில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.7 ரிக்டர் அளவாகப் பதிவானது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவ மாகாணங்கள் மற்றும் மத்திய தலைநகர் பகுதிகளிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நேரப்படி மதியம் 12.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவிவ் 5.7 ஆக பதிவானதாகவும் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஷி கான் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானில் பகல் 12.58 மணிக்கு, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 2005 ஏற்பட்ட 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.