விழுப்புரம்:
‘பீஹாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்’ என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
மதுக்கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். அதோடு நில்லாமல், மாநாட்டுக்கு வருமாறு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, விழுப்புரத்தில் இன்று (செப்.,11) நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சி வரம்புகளை கடந்து, ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். வி.சி.க., மது ஒழிப்பு மாநாட்டில் புதிதாக கட்சி துவங்கி உள்ள விஜய்யும் பங்கேற்கலாம். மதவாதக் கட்சி என்பதால் பா.ஜ., பா.ம.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்களுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்றார் அவர்.