கோவை:
‘‘முகூர்த்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்பார்,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி:
ஒரே நாடு; ஒரு தேர்தல் மாபெரும் முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மக்களின் சிரமும், நேரமும் மிச்சமாகிறது. தேர்தல் கமிஷனின் செலவும், மக்கள் வரிப்பணமும் மிச்சமாகும். அரசியல் கட்சிகளின் செலவுகளும் குறையும்.
உள்ளூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்; அதைத் தீர்க்க முடியவில்லை. ஆனால், தமிழக முதல்வர், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு திரட்டி வருகிறார். இப்படித்தான் எல்லாமே வேடிக்கையா நடந்துகிட்டு இருக்கு.
அமைச்சர் மகேஷ் தொகுதியிலேயே பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள், வெளி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது போல், இதிலும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன், கூட்டணியில் ஏதோ ஒரு பிரச்னைக்காக மாநாடு நடத்துகிறார். கூட்டணியை விரிவுபடுத்தவா, விரிசல் படுத்தவா என்று புரியவில்லை.
உதயநிதி துணை முதல்வராக்குவதற்கு, முகூர்த்த நாள் தேடிக் கொண்டிருக்கின்றனர். நல்ல நாள் முடிவு செய்யப்பட்டதும், துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் பகுத்தறிவுவாதிகள்.
பவள விழா, தொண்டர்களுக்காக நடத்தப்பட்டதல்ல, முடிசூட்டு விழாவின் துவக்கம். இதுதான் வாரிசு அரசியல். தி.மு.க.,தொண்டர்கள், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், கருணாநிதியின் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.